Saturday, November 22, 2014

நம்பிக்கை மனுஷிகள் ஆவணபடம் குறித்து

பிரியத்துற்குரிய வானவன் மாதேவி - இயலிசை வல்லபி சகோதரிகள் குறித்து கீதா இளங்கோவன் அவர்கள் நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பில் பதினான்கு நிமிட ஆவணப்படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். அக்கறையுடன் அவர்களின் வாழ்வை ஆவண செய்ய முற்பட்டதற்கும் அதை நிறைவாக செய்ததற்கும் அவருக்கும் அவருடைய குழுவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். மிக முக்கியமாக இத்தகைய ஆவணப்படங்களில் எங்கிருந்தோ ஒரு மெல்லிய துயரசாயல் வந்துவிடும் (பெரும்பாலும் பின்னணி இசையில் அது உருவாகிவிடும்) ஆனால் இதில் அவர்களை இயல்பாக படமாக்கியிருப்பது மிக சிறப்பு. அவர்களின் சிரிப்பே அவர்கள் வாழ்க்கையின் செய்தியாகிறது. அதுவே நம்பிக்கை மனுஷிகள் எனும் தலைப்பிற்கு நியாயம் செய்வதாகும்.


https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4



தங்களுக்கு இந்த நோய் எப்படி துவங்கியது? என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தியது? ஆதவ் அறகட்டளை உருவானதன் பின்னணி, அதன் இன்றைய செயல்பாடுகள், அதன் நாளைய செயல்திட்டங்கள் என இவைகளை பற்றி இருவரும் பேசியிருக்கிறார்கள். இருவரும் எப்பொழுதையும் போல சிரித்தபடியே இருக்கிறார்கள். எவருக்கோ எதுவோ நடந்ததை விவரிக்கும் மனவிலக்கத்துடன் அவர்களால் தங்கள் வாழ்வை அணுகமுடிந்தது ஒரு மாபெரும் வரம், பெருந்துயரின் தவத்தில் கனிந்த வரம். 

வானதி - வல்லபி சகோதரிகளை சுற்றியிருப்பவர்களை தனிப்பட்ட முறையில் நானறிவேன். குறிப்பாக அவர்களுடைய தந்தையையும் தாயையும், சோமு, நாகராஜ், சுப்பு, பிரசாத் போன்ற நல்லுள்ளங்களையும் எப்போதும் நன்றியுடன் நினைத்துகொள்வேன். வல்லபி இந்த ஆவணப்படத்தில் ஒரு ஆண் தொட்டு தூக்குவதில் உள்ள சங்கடங்களையும், உதிரபோக்கு நாட்களில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல்களையும் சொல்லும்போது மனம் பதறியது. நடக்க முடிந்தவர்களுக்கு வெறும் இரண்டு கால்கள், இவர்களுக்கு ஆயிரம் கால்கள் என எண்ணிக்கொண்டேன். அன்பும் கனிவும் கலந்த கரங்களால் எப்போதும் அரவணைக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கிடைத்த பேரன்பை பன்மடங்கு பெருக்கி திருப்பியளிக்கிறார்கள். எல்லா இசங்களை சேர்ந்தவர்களும் அவர்களின் நண்பர்களாக இருக்கிறார்கள், மாணவர்கள், சூழலியல் ஆர்வலர்கள்/போராளிகள், இலக்கிய ஆளுமைகள், சினிமா ஆளுமைகள், ஊடகவியலாளர்கள், மருத்துவர்கள் என பலரும் அவர்களிடம் இளைப்பாறி சென்று தங்களை மீட்டுகொள்கிரார்கள். வற்றாத ஆற்றலின் ஊற்று பொங்கியபடியே இருக்கிறது. 

தொடர்பற்ற பொருளற்ற அபத்த நிகழ்வுகளின் தொகுப்பு என்பதற்கு மேல் வாழ்க்கையை எப்படி புரிந்துகொள்ள முடியும்? வாழ்க்கைக்கு நோக்கம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் அதற்கான தேடல் இங்கே நாம் உயிர்த்திருக்க தேவையாய் இருக்கிறது. வானதி - வல்லபி சகோதரிகள் தங்கள் வாழ்க்கையை முழுமையாகக முயல்கிறார்கள். பொருள் தேடிக்கொள்ள முயல்கிறார்கள். சக உயிருக்கு பயனுள்ள ஒரு வாழ்வு என்பதே நானறிந்தவரை இந்த வாழ்க்கையின் உச்சபட்ச பொருளாக இருக்க முடியும். எத்தனை உயிர்களுக்கு? என்பது மட்டுமே கேள்வி. அவர்கள் தங்கள் முழு உயிராற்றலையும் செலுத்தி கனவுகளுக்கு உயிர் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். என்றென்றைக்கும் அவர்களின் ஆற்றல் வற்றாமல் இருக்கட்டும். அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தபடுத்திகொள்ள முயலும் முயற்சி சித்தியடையட்டும் என்பதை தாண்டி வேறென்ன பிரார்த்திக்க முடியும்?  


2 comments:

  1. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்த்தபடுத்திகொள்ள முயலும் முயற்சி சித்தியடையட்டும் என்பதை தாண்டி வேறென்ன பிரார்த்திக்க முடியும்? முடிந்தவர்கள் உதவலாமே

    ReplyDelete